பிரதமரைச் சந்திக்கிறார் ஓபிஎஸ்..! அதிமுகவில் அதிரடி மாற்றங்கள்?

அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. அதிமுகவை இணைக்கும் முயற்சியில் ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் தீவிரமாக இறங்கின.

அதற்காக இரு அணியிலும் குழு அமைக்கப்பட்டன. எனினும் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்ததே தவிர கட்சியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தவில்லை.

இரு அணிகளுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது. ஓபிஎஸ் அணி சார்பில் முன்வைக்கப்படும் நிபந்தனைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இந்நிலையில், ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார். அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றுள்ளனர். இன்று மாலை 4.15 மணிக்கு பிரதமர் மோடியைச் சந்தித்து ஓபிஎஸ் அணியினர் பேச உள்ளனர். பிரதமரை ஓபிஎஸ் சந்திக்க பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமருடனான சந்திப்பின் போது தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்தும் ஓபிஎஸ் விளக்க இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பாஜகதான் ஓபிஎஸ் அணியை இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், ஓபிஎஸ் பிரதமரைச் சந்திக்க இருக்கிறார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Topics: Top news