ஹைட்ரோகார்பன் திட்டத்தால்… தமிழகம் பேரழிவை சந்திக்கும் அபாயம்..!

மக்களுக்கான அரசு என்ற நிலை மாறி  நமக்கான எல்லா வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் நாமே போராடி அரசுக்கு எதிரான மக்கள் ஆயுதத்தை திரட்டினால் மட்டுமே நமது அடுத்த சந்ததிக்கான வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை வந்துவிட்டது.

கடந்த ஆட்சியில்  அன்றைய பிரதமர் மன்மோகன்சிங், ‘விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் என்ற நிலையில், ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து வருகிறது.  நமக்கான உணவை நாம் உற்பத்தி செய்யும் திறனை இழந்து வரும் நிலையில், பொருளாதார மேதையின் இவ்வாக்கை தொடக்கத்தில் சொன்ன வாக்கியத்தோடு பொருத்தி பார்க்கலாம். ஆனால், காவிரி டெல்டா பகுதியினரை பொருத்தவரையில் இதனை மீத்தேன் திட்டத்தோடு தொடர்பு படுத்தி பார்ப்பது நல்லது.

எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்கு உலகெங்கும் இயற்கை வாயுக்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் இத்தேவைக்கு மீத்தேன் வாயுதான் அதிக அளவில் பயன்பட்டுவருகிறது. காரணம்  எளிதாக கிடைக்கக்கூடியது மற்றும் மலிவானது என்பதே.

மீத்தேன் நமது நிலத்தில் இருந்து எடுப்பது என்பது, சாதாரணமாக நமது வயல்களிலும் வீடுகளிலும் நிலத்தடி நீர் எடுக்க ஆழ் துளை கிணறுகள் தோண்டுவது போல் அல்ல.  முதலில், பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதைத்தான்    ‘நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்கிறார்கள். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

இம்முறையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தில், பூமியை 10, 000 மீட்டர் வரையிலும் அதற்கு மேலுமான ஆழத்தில் துளையிடுவார்கள். பிறகு, அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரையிலும் அதற்கு மேலும் எல்லா திசைகளிலும் துளையிடப்படும் (bore). இப்படி எல்லா திசைகளிலும் துளையிடப்பட்ட பின்பு பூமிக்கு மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் தேர்வு செய்யப்பட்ட வேதி நுண் துகள்களை கலந்த நீரை செலுத்துவார்கள்.  இதன் மூலம் துளை நீண்டிருக்கும் எல்லா பகுதிகளிலும் விரிசல்கள் உண்டாகும். நிலத்தடியில் அடைபட்டுக்கிடந்த மீத்தேன் எரிவாயு ஒன்றோடு ஒன்று கலந்து துளையூடாக செல்லும் நீரில் கலந்துவிடும். அவ்வாறு கலந்த நீரை மீண்டும் உறிஞ்சி பூமியின் மேல்பரப்பிற்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்தகரிக்கப்பட்டு எஞ்சிய கழிவு நீர் “நீராவி மூலம் ஆவியாக வெளியேற்றப்படும். பெரும்பான்மையான இடங்களில் அவை நீர் நிலைகளில் கலந்து விடப்படும். இதுவே (Hydraulic Fracking) என்று அழைக்கப்படும் செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி அதன் மூலமாக மீத்தேன் எரிவாயு சேகரிக்கும் முறை.

 

மீத்தேன் என்பது அடிப்படையான வளிமம் (வாயு – gas) ஆகும். இது ஹைட்ரோ-கார்பன் ( hydrocarbon) வகையைச் சார்ந்த ஒரு மூலக்கூற்றுப் பொருள் (molecule). மீத்தேனில், ஒரு கார்பன் (கரிமம்) மற்றும் நான்கு ஹைட்ரஜன் (நீரகம்) தனிமங்களால் (CH4) ஆன வேதியியல் கலவைகள் நிறைந்திருக்கும். முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்ட மீத்தேனை நுகர்ந்தால் எவ்வித மணமும் இருக்காது. மீத்தேனிற்கு தனியான நிறமும் இல்லை. காற்றில் 5 முதல் 15 சதவிகதம் மீத்தேன் கலந்தால், அது வெடிப்பொருளாக மாறும் தன்மை உடையது. எளிதில் எரியக்கூடிய தன்மையுடையது மீத்தேன் என்பதால், கவனக்குறைவால் எற்படும் சிறு கசிவும் ஆபத்தைத் தரக்கூடியது. ஆகையால், எங்காவது கசிவு இருந்தால் உணர்வதற்கு எளிதாக, இவ்வளிமத்தில் சிறிதளவு கந்தகம் (சல்பர்) சார்ந்த கலவையை சேர்த்து நெடி வீசக்கூடியத் தன்மையுடையதாக மாற்றுவார்கள்.

நமது ஊரில் பொதுவாக கிராமப்புறங்களில் அக்காலத்தில் அடிக்கடி கொள்ளிவாய்ப்பிசாசு கதைகளை கேள்விப்பட்டிருப்போம். இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இவ்வாயு  வெளிப்படுவதால் திடீர் என்று ஒரு ‘தீ’ பற்றி எரியத்தொடங்கும். இவ்வாயு   எரிவதை மக்கள் கண்டு, அக்காலத்தில் கொள்ளிவாய்ப் பிசாசு என்று அழைத்திருக்கிறார்கள். அதேபோல, இப்படி தீயை உருவாக்குவதால் மீத்தேன் வாயுவிற்கு கொள்ளிவாய் பிசாசு  என்றும் பெயர் உண்டு. (எரியக்கூடிய வாயு; கொள்ளி = எரி). இவ்வகையில், கொள்ளிவாய்ப்பிசாசுவிற்கும் மீத்தேன் வாயுவிற்கும்  நெருங்கிய தொடர்பு உண்டு. அவ்வகையில் நம் அனைவருக்கும் மீத்தேன் ஒன்றும் புதிதல்ல.

அது கொண்டுவரும் ஆபத்துகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதிது. மீத்தேன் வாயுவால்,  ஏற்கனவே பல்கி பெருகி வரும் புவி வெப்பமாதல் இன்னும் பன்மடங்காகும். இது நமது நிலப்பரப்பிற்கும் நீர்வளத்திற்கும் மிகப்பெரிய கேடு விளைவிக்கும்.

அமெரிக்காவில், கிழக்கு ஆர்லெம் என்ற இடத்தில், மீத்தேன் கசிவால் நடந்த வெடி விபத்தால் இரண்டு கட்டிடங்கள் முற்றிலுமாக சிதைந்து போயிருக்கின்றன. இரண்டு பேர் கொல்லப்பட்டும் 16 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், விபத்து நடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போஸ்டன் பல்கலைக்கழக மாணவர்கள், மீத்தேன் எடுத்துச்செல்லப்படும் குழாய்களை ஆராய்ந்து 5893 கசிவுகளை கண்டறிந்துள்ளனர்

இந்த ஆய்வை வெளியிட்ட பிறகு, இக்குழுத்தலைவர் ராபர்ட் ஜாக்சன், தவறுதலாக கீழே போடப்படும் சிகரெட் கூட மிகப்பெரிய வெடிவிபத்தை இப்பகுதியில் உருவாக்கும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீத்தேன் எடுத்து செல்லும் குழாய்கள் பல நூறு மைல்கள் நீள்வதால் எல்லா நேரமும் எல்லா கசிவையும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அதனால், மக்கள் நிறைந்த பகுதிகளில் இவ்வாபத்தான திட்டம் செயல்படுத்துவது தவறென அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

காவிரி படுகையில், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது. ஆனால், கவனமாக, அங்கு நிகழும் விபத்துக்களையும் பாதிப்புகளையும் சொல்லாமல் தவிர்த்துவிட்டனர். அங்கு, மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.

பல்வேறு நிலையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தினால், நிலத்தடி நீர் முழுமையாக உரிஞ்சப்பட்டதால், இப்பகுதியில் கிட்டதட்ட 5000 கிணறுகளில் 200 அடிக்கும் கீழே நீர் அளவு குறைந்து, மக்களுக்கான நீர் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டு, அதனை சரி செய்ய, ஒவ்வொரு கிணறுக்கும் 10000 டாலர் செலவு செய்து (மொத்தமாக, 5 கோடி டாலர்) செய்திருக்கின்றனர். சிந்தித்து பாருங்கள், காவிரி நீரின் வரத்து இல்லாமல், ஏற்கனவே நிலத்தடி நீர் பாதளத்திற்கு சென்றுவிட்ட நிலையில், காவிரி டெல்டா பகுதியில், விவசாயத்திற்கு மட்டுமல்ல, நாம் குடிக்கவே நீர் இல்லாத நிலையில் நாம் வாழத்தான் முடியுமா? இல்லை, மக்களுக்கு நீர் கிடைக்க அரசாங்கங்களும் மீத்தேன் எடுக்கும் நிறுவனமும் ஏதாவது செயற்திட்டங்களை வகுத்திடத்தான் போகிறதா?

மாண்டேனோ பல்கலைக்கழகம் இதுதொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், மீத்தேன் எடுக்கும் திட்டத்தில், சோடியம் கரைசல்களை அதிகளவில் பயன்படுத்துவதால், நிலம் முழுமைக்கும் சோடியம் கலந்த வேதிப்பொருட்கள் நிறைந்திருப்பதாலும், அது நிலத்தின் ஆழ வேரூடி நிலைத்து நிற்பதால், மரம், செடிகளின் வளர்ச்சி முழுமையாக பாதிப்படைகிறது. இதனை அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும் என எச்சரிக்கை செய்கின்றனர்.

மீத்தேன் எடுக்கும் செயல் முறையினால், பல்லாயிரக்கணக்கான உபரி நீர் வெளியேற்றப்படும், இவை முற்றிலுமாக நச்சுத்தன்மையுடையதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலத்தடி நீரை உருவாக்கும். செடி, கொடி, மரங்களற்ற, குடிக்க நீரற்ற நிலமாக காவிரி படுகை இருப்பதை கற்பனை செய்ய முடிகிறதா?

இப்படியான ஆபத்தான திட்டம்தான் காவிரி டெல்டா பகுதியை நோக்கி வரப்போகிறது. ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் செயல்பட தொடங்கிவிட்டது.  தமிழகத்தை அடுத்து குறிவைத்து வருகிறது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல அடுத்த 100ஆண்டுகளுக்கு! இத்திட்டம், காவிரி டெல்டா பகுதியில் 50 கிராமங்களை உள்ளடக்கிய, 164819 ஏக்கர் நிலப்பரப்பில் 667 சதுர கி.மீ பரந்து விரிய இருக்கிறது.

இன்னொரு கூடுதல் செய்தியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 35 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுமேயானால், 6.25 லட்சம் கோடி மதிப்பிலான மீத்தேனை எடுக்க முடியும் என சொல்கிறார்கள். ஆனால், இது முழுமைக்கும் தனியார் நிறுவங்களுக்கான சொத்தாக மாறவிருக்கிற தொகை. அல்லது தனி மனிதர்களின் சொத்து. காவிரி பகுதியில் முறையாக விவசாயம் நடந்தால், 35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில்கள் நடக்கும். இது தமிழக மக்களுக்கு குறிப்பாக காவிரி டெல்டா பகுதி மக்களுக்குள் பகிரப்படும் தொகையாக இருக்கும். இதுதான் நம்மை நம் மண்ணை, நமது அடுத்தடுத்த தலைமுறைகளை காக்கும் சொத்தாக அமையும். கோடிக்கணக்கான மக்கள் பகிர்ந்துண்ணப்போகும் உணவை, உடையை, நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்றே ஒன்று வளைக்கப்பார்க்கிறது.

தமிழகத்தை காப்பாற்றவும் எம் எதிர்கால சமூகத்தை காப்பாற்றவும் நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ளவும் நாம் தான் முன் வரவேண்டும். நம் வயிற்றுப்பசிக்கு நாம்தான் உணவு உட்கொள்ள வேண்டும்.

Related Topics : Tamilnadu News