மூத்த வழக்கறிஞர் இப்படியா பேசுவது? ராம் ஜெத்மலானிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறித்து மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் செயல் இழிவானது என டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தொடர்பான தன் தரப்பு அறிக்கையை பதிவு செய்வதற்காக டெல்லி உயர்நீதிமன்ற இணைப் பதிவாளர் முன் அருண் ஜேட்லி நேரில் ஆஜரானார்.

அப்போது, அருண் ஜேட்லி குறித்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சில மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசினார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த வழக்கு நீதிபதி மன்மோகன் முன் விசாரணைக்கு வந்தபோது, ராம் ஜெத்மலானி கூறிய வார்த்தைகள் குறித்து ஜேட்லியின் வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.

மூத்த வழக்கறிஞராக உள்ள ராம் ஜெத்மலானி, இவ்வளவு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியது மிகவும் இழிவான செயல் என கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த இழிவான வார்த்தைகளை அரவிந்த் கேஜ்ரிவால் சொல்லி அவர் பேசியிருந்தால் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Topics: Top news