ஆதாரை கட்டாயமாக்கியது ஏன்? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டும் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது ஏன்? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.

பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெற, புதிய வாகனங்களைப் பதிவு செய்ய, இலவச மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உணவு பெற போன்றவற்றிற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கியது. மேலும் பான் எண் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதுமாதிரி பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கி வருகிறது மத்திய அரசு.

இந்நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நலத்திட்டங்களைப் பெற ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும் அதை பொருட்படுத்தாமல் பல்வேறு திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கியது ஏன்? என கேள்வியெழுப்பியது.

ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறி ஆதாரை கட்டாயமாக்கியதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Related Topics: Top news