அரிசி, கோதுமை, பாலுக்கு வரிவிலக்கு..! ஆடம்பர பொருட்களின் விலை உயரும்..!

வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை  வரி எனப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வர உள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்படும்.

5% முதல் 28% வரை நான்கு வகைகளில் வரிவிதிக்க திட்டமிடப்பட்டு அதற்கேற்ற வகையில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதற்கான சட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்டுள்ள இரண்டு நாட்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியது.
நேற்றைய கூட்டத்தில் 1211 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.

அதன்படி அத்திவாசியத் தேவைகளான அரிசி, கோதுமை, பால் ஆகிய உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சர்க்கரை, தேயிலை, காபி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு 5% வரியும் சோப்பு, ஹேர் ஆயில் உள்ளிட்ட பொருட்களுக்கு 18% வரியும் குளிர்பானங்களுக்கு 28% வரியும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்தியாவசியம் அல்லாத ஆடம்பரப் பொருட்களுக்கு 28% வரியுடன் செஸ் வரியும் விதிக்கப்பட உள்ளது.

அதன்படி, சொகுசு கார்களுக்கு 28% வரியுடன் 15% செஸ் வரியும் சிறிய ரக பெட்ரோல் கார்களுக்கு 28% வரியுடன் 1% செஸ் வரியும் டீசல் கார்களுக்கு 28% வரியுடன் 3% செஸ் வரியும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

81% பொருட்களுக்கு 18% வரியும் 19% பொருட்களுக்கு மட்டுமே 28% வரியும் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ள நிலையில், அனைத்து பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி விகிதங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Topics: Top news