டிரைவர் இல்லா பஸ் போக்குவரத்து விரைவில் துவக்கம்!

டிரைவர் இல்லாமல் இயங்கும் எலக்ட்ரிக் பஸ் போக்குவரத்து விரைவில் இயக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
வெலகம்புடியில் உள்ள தற்காலிக தலைமைச் செயலகத்தில் நகர வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ஆந்திராவின் புதிய தலைமைச் செயலகம் 160 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இதில், 20 ஏக்கரில் கட்டிடங்களும், மீதமுள்ள 140 ஏக்கரில் ப்ளூ அண்டு கிரீன் அடிப்படையில் தண்ணீர், செடிகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

மேலும், அமராவதி தலைநகருக்காக சிங்கப்பூர் அரசுடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு 90 சதவீதம் டிசைனிங் பணிகள் முடிவடைந்த நிலையில், அதற்கான இறுதி வடிவமைப்பை வரும் 27ம் தேதி சமர்ப்பிக்க உள்ளனர்.

கலாசார மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமராவதி தலைநகர் அமைக்கப்படும். போக்குவரத்து சர்வதேச தரத்தில் இருக்கும்வகையில் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் அமைக்கப்படவுள்ளது.

புதிய தலைநகர் அமராவதி முதல் தலைமைச் செயலகம் வரை டிரைவர் இல்லாத எலக்ட்ரிக் பஸ் முதல் கட்டமாக விரைவில் இயக்கப்படும். மேலும் பஸ், ரயில் மற்றும் கப்பல்களில் ஒரே டிக்கெட்டில் எல்லா மார்க்கத்திலம் பயணம் செய்யும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். சோலார் மின்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Related Topics: Online Tamil News