டாஸ்மாக் கடையை தகர்த்தெறிந்த பெண்கள்..! தகர்க்கப்பட்டது டாஸ்மாக் மட்டுமல்ல..!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சியின் பிரதான வாக்குறுதி என்பது மதுவிலக்கு என்பதாகவே இருந்தது.

ஏனென்றால் அந்த அளவுக்கு தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளும் அதிகளவில் இருந்தன. கொலை, கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்தாடியதோடு பல குடும்பங்கள் மதுவினால் சீரழிந்தன.

அப்படி ஒரு நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய மதுக்கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதிலும் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மதுக்கடைகள் மூடப்பட்டன. நெடுஞ்சாலைகளை ஒட்டி மூடப்பட்ட கடைகளை குடியிருப்புப் பகுதிகளுக்கும் ஊருக்குள்ளும் அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் மதுக்கடை அமைக்கும் இந்த முயற்சிக்கு பெண்கள் உட்பட அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். அதில் வெற்றியும் கண்டனர்.

சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரம் பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த 9 மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், தாம்பரம் அருகே உள்ள பூந்தண்டலம் பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மதுக்கடையை அமைப்பதற்காக ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மதுக்கடை திறப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த விஷயம் அறிந்து உச்சகட்ட கோபத்தில் பொங்கியெழுந்த அப்பகுதி பெண்கள், கடப்பாரை, சுத்தியல், மண்வெட்டி என ஆயுதங்களுடன் களத்தில் இறங்கினர்.

ஆயுதங்களுடன் களமிறங்கிய நூற்றுக்கும் அதிகமான பெண்கள், அக்கட்டிடத்தை அடித்து நொறுக்கினர். கடும் கோபத்துடன் அக்கட்டிடத்தை பெண்கள் தகர்த்தெறிந்தனர்.

தகர்க்கப்பட்டது டாஸ்மாக் கடைக்காக கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல; ஆட்சியாளர்களின் மக்கள் மீதான தவறான கருத்தும் கூட; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் விரும்பாத ஒன்றை திணிக்கும் ஆட்சியாளர்களின் முயற்சிகளும்தான்;

மக்கள் விரும்புவதை செயல்படுத்த வேண்டிய அரசு, மக்கள் விரும்பாத ஒன்றை திணிக்கிறது என்றால் இது எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்?

இனியாவது மக்கள் பகட்டான அரசியலை ஒதுக்கி மக்கள் நலனில் அக்கறையும் தொலைநோக்கு திட்டங்களையும் கொண்டவர்களை அங்கீகரித்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

Related Topics: Top news