தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டாம்..! ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டவிழ்த்து விடும் ராஜ்நாத் சிங்..!

ஆட்சியாளர்கள் தவறான உத்தரவு பிறப்பித்தால் அதனைச் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம் எனவும் ஆட்சியாளர்களின் அனைத்து உத்தரவுகளையும் ஆமோதிக்கும் தலையாட்டி பொம்மைகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கக்கூடாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

குடிமைப்பணி அதிகாரிகள் தினம் டெல்லியில் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்கள் நலத் திட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பை புகழ்ந்து பேசியதோடு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.

2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு, தரமான கல்வி, சுகாதார வசதி, உணவு என்ற இலக்கை அடைய மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம் என்றார்.

குடிமைப்பணி என்பது மற்ற பணிகளைப்போல அல்ல; ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் பொறுப்புணர்வும் உண்டு. நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பு அளப்பரியது என்றார்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கடமையுணர்வு, பொறுப்புணர்வுடன் நடுநிலை சேர்த்து நடுநிலை தவறாத உணர்வும் இருத்தல் அவசியம். அப்போதுதான் பாரபட்சமின்றி மக்கள் நலனுக்கான முடிவுகளை எடுக்க முடியும். ஆட்சியாளர்கள் ஒருவேளை தவறான உத்தரவு பிறப்பித்தால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தலையாட்டி பொம்மைகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கக்கூடாது. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட அச்சமோ தயக்கமோ தேவையில்லை. நடுநிலை தவறாமல் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். மனசாட்சிக்கு துரோகமின்றி ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Topics: Top news