சிபிஐ போட்ட போட்டில் லண்டனுக்கு ஓடிய கார்த்தி சிதம்பரம்..!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ கடந்த சில தினங்களுக்கு முன் சோதனை நடத்திய நிலையில், கார்த்தி சிதம்பரம் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை சட்டவிரோதமாக பெற்றுத்தர உதவியதாகவும் அதன்மூலம் ஆதாயம் அடைந்ததாகவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் சோதனை நடத்தினர்.

அப்போது, கார்த்தி சிதம்பரத்தின் பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், மடிக்கணினிகள், கணினி வன்பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆவணங்கள் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், தனது நண்பர் சிபிஎன்.ரெட்டியுடன் கார்த்தி சிதம்பரம் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிபிஐ விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காகவே கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் வழக்கமாகச் செல்லும் கோடை பயணம்தான் இது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Topics: Top news