திமுகவுடன் கூட்டணியே வேண்டாம்.. தமிழக காங்கிரஸ் போர்க்கொடி.!

dmk-do-not-be-a-coalition
திமுகவுடன் கூட்டணியே வேண்டாம்.. தமிழக காங்கிரஸ் போர்க்கொடி.!

திமுகவுடன் கூட்டணியே வேண்டாம்.. தமிழக காங்கிரஸ் போர்க்கொடி.!

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், தி.மு.க., கூட்டணி வேண்டாம் என, பலர் போர்க்கொடி தூக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. மாநில தலைவர், திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். ‘காமராஜர் பிறந்த தினத்திற்குள், 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

அரசியல் சட்டத்திற்கு புறம்பாக, தமிழகத்தில், கவர்னர் ஆய்வு பணியில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 25 சதவீதம் தொகுதி பங்கீடு பெற வேண்டும்.

ஆட்சியில் பங்கு தந்தால் தான், சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில், காங்கிரசுக்கு, ‘சீட்’ ஒதுக்கினால், கூட்டணியே வேண்டாம்; தனித்து போட்டியிடலாம்.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சி இருக்கிறது. ஆனால், தி.மு.க., நடத்தும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு, அழைப்பு விடுப்பதில்லை. கூட்டணி கட்சி என்ற மரியாதையை கூட, காங்கிரசாருக்கு தருவதில்லை.

எனவே, இதை எல்லாம் சரி செய்ய வேண்டும்; சரி செய்யாமல், கூட்டணி சேரக்கூடாது. கோஷ்டி தலைவர்களின் சிபாரிசில், மாவட்ட தலைவர் பதவியை பெற்றவர்கள், மாநில தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்.

இன்றைய கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். திருநாவுக்கரசர் பேசுகையில், கூட்டணி குறித்து, இப்போது, எந்த முடிவும் எடுக்க வேண்டாம்; தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கலாம்.

நம் கருத்தை டில்லியில் தெரிவிப்போம். அது வரைக்கும், தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, வெளிப்படையாக பேச வேண்டாம். தி.மு.க.,வுடனான உள்ளூர் பிரச்னைகளை, நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீட்டுக்காக, தி.மு.க.,விடம் பேசுவதற்கு, குழு அமைக்கப்படும். ரஜினி வருகையால், காங்கிரஸ் ஓட்டு வங்கி பாதிக்காது மற்ற கட்சிகளின் ஓட்டு வங்கி தான் பாதிக்கும், என்றார்.

Related Topics:Tamil online news