குடியரசுத் தலைவர் தேர்தல் இப்படித் தான் நடக்கப்போகிறது!

குடியரசுத் தலைவர்:

இந்தியாவில் அரசு நிர்வாகத்தின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். மத்திய நிர்வாகக் குழு, கூட்டாட்சி நிர்வாகம் மற்றும் முப்படைகள் ஆகியவற்றின் தலைவர் குடியரசுத் தலைவர் தான்.

குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகிக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது.

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தகுதி:

1. 35 வயது நிரம்பிய இந்தியராக இருக்க வேண்டும்

2. மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

3. ஊதியம் மற்றும் இலாப பங்கீடு பெற்று அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியக் கூடாது.

குடியரசுத் தலைவர் தேர்தல் முறை:

மக்களவை, மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது போல குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

குடியரசுத் தலைவர் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர்.

தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேச எம்.எல்.ஏ-க்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால் மற்ற யூனியன் பிரதேச எம்.எல்.ஏ-க்கள் வாக்களிக்க முடியாது.

எம்.எல்.ஏ-க்களின் வாக்கு கணக்கீடு முறை:

மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்றவாறு விகிதாச்சார அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இந்த கணக்கீட்டு முறை அரசியல் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு எம்.எல்.ஏ-வின் ஓட்டு = (மாநில மக்கள் தொகை/எம்.எல்.ஏ- க்களின் எண்ணிக்கை)*1000

இதுவே ஒரு எம்.எல்.ஏ-வின் ஓட்டு கணக்கிடும் முறை.

மாநில மக்கள் தொகை என்பது கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படியான மக்கள் தொகை.

எம்.பி-க்களின் வாக்கு கணக்கீடு முறை:

மக்களவை உறுப்பினர்கள் = 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் = 245
மாநிலங்களவை உறுப்பினர்களில் 12 நியமன எம்.பி-க்கள் வாக்களிக்க மாட்டார்கள்

எனவே வாக்களிக்கும் எம்.பி-க்களின் எண்ணிக்கை = 776

ஒரு எம்.பியின் ஓட்டு மதிப்பு = அனைத்து மாநில எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை/மொத்த எம்.பி-க்களின் எண்ணிக்கை

தேர்தல் வாக்குச் சாவடிகள்:

எம்.எல்.ஏ-க்கள் அந்தந்த மாநில சட்டமன்றங்களிலும் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலும் வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பு முடிந்த பின் வாக்குப் பெட்டிகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

குடியரசுத் தலைவர் தேர்வு:

50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

இருவர் மட்டும் களத்தில் இருந்தால் எந்த பிரச்னையும் கிடையாது. அதே நேரத்தில் 2-க்கும் மேற்பட்டோர் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் தனது விருப்ப அடிப்படையில் முதல், இரண்டு, மூன்று என முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்.

தற்போது ஆளும் மத்திய பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமாரும் போட்டியிடுவதால் பிரச்னை கிடையாது.

யார் 50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறார்களோ அவரே குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

Related Topics: Top news