மின் கட்டணம் வசூலிக்க புதிய மொபைல் வாலட் விரைவில் அறிமுகம்..!

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் மொபைல் வாலட் சேவையைத் தொடங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

மின் கட்டண வசூல், டெண்டர் கேட்பு வைப்புத்தொகை ஆகிய பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும் மத்திய மின் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

ஆனாலும் டெபிட் கார்டுகள் மூலம் மின் கட்டணத்தை வசூலிக்கும் சேவை இதுவரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடந்த அனைத்து மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாட்டில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாநில மின் வாரியங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டியதன் அவசியம் அதிகமானதை அடுத்து தனியார் நிறுவனம் மூலம் மொபைல் வாலட் சேவையைத் தொடங்க தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

மின் வாரியம் சொந்தமாக மொபைல் ஆப் உருவாக்க அதிக காலம் தேவைப்படும் என்பதால் அதுவரை காத்திராமல், தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மொபைல் வாலட் மூலம் நுகர்வோரிடமிருந்து மின் கட்டணம் வசூலிக்கும் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த செயலியில் டிஜிட்டல் முறையில் பணத்தை ஏற்றி அதன்வழியாக நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்தலாம்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அதுவரை போலி மொபைல் வாலட்களில் கட்டணத்தை செலுத்தி நுகர்வோர் ஏமாற வேண்டாம் எனவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Related Topics: Top news