பிராந்தியக் கட்சிகளால் பாஜகவைக் கட்டுப்படுத்த முடியும்: மம்தா பானர்ஜி அதிரடி..!

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் காலூன்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக தீவிரமாக எடுத்து வருகிறது. பாஜகவின் முயற்சியின் நேர்மறை விளைவாக உத்தரப் பிரதேசத்தில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

தமிழகம், மேற்கு வங்கம், பீஹார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிராந்தியக் கட்சிகளின் ஆட்சியைத் தூக்கி எறிந்து காலூன்ற பாஜக முயற்சி எடுத்து வருகிறது.

ஆனால் பாஜகவை வீழ்த்துவதற்கு சில பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் வெளிப்படையாகவே மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான கூட்டணி வியூகங்களை பிராந்தியக் கட்சிகள் இப்போதே முன்னெடுத்து வருகின்றன.

அண்மையில் உத்தரப் பிரதேச மாநில பிராந்திய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, பாஜகவிற்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

இந்நிலையில், ஒடிசாவிற்கு மூன்று நாள் பயணமாக சென்றிருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, நாடு முழுவதும் பாஜக வளர்ந்து வருவதைத் தடுக்க பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களில் பாஜகவின் காலூன்ற நினைக்கும் முயற்சியைத் தகர்க்கத் தேவையான பலம் பிராந்தியக் கட்சிகளிடம் உள்ளது.

ஜாதி, மதம், இனம், பிராந்தியம் என்கிற ரீதியில் மக்களைப் பிரித்தாளும் கொள்கையைக் கொண்ட பாஜகவை எதிர்த்து வெற்றிகாணவும் நாட்டின் கூட்டாட்சி அமைப்பைக் காக்கவும் அனைத்து பிராந்திய கட்சிகளும் இணைந்து மூன்றாவது அணியாக உருவெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

நவீன் பட்நாயக்குடனான சந்திப்புக்குப் பிறகு பிராந்தியக் கட்சிகளின் கூட்டணிக்கு மம்தா விடுத்துள்ள அழைப்பு, தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது மகா கூட்டணி உருவாவது உறுதியாகியுள்ளது.

ஆனால், மகா கூட்டணியில் எந்தெந்த பிராந்தியக் கட்சிகள் இணையப் போகின்றன? 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை அந்த கூட்டணி வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Topics: Top news