அங்கீகாரமே பெறாமதான் அக்கா எலெக்சன்ல நின்னுச்சா? தீபா மீது தொண்டர் பரபரப்புக் குற்றச்சாட்டு..!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது போதாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது பங்கிற்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் சங்கம் ஒன்றை ஆரம்பித்தார்.

அதிமுகவின் தொண்டர்களில் ஒரு பிரிவினர் தீபாவுக்கு ஆதரவாக அவர் தொடங்கிய பேரவையில் இணைந்தனர்.

பேரவையில் உறுப்பினர்கள் சேர்ப்பு படிவத்திற்கு 10 ரூபாய் வசூல் செய்து உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிட்டார் தீபா.

அந்த பேரவையின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளராக தீபாவும் செயலாளராக ராஜா என்பவரும் தலைவராக சரண்யா என்பவரும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில். சென்னை மாவட்ட சங்கங்கள் பதிவாளர், தீபா பேரவையை பதிவு செய்ய மறுத்து விட்டதாகவும் ஆனால் அதையெல்லாம் தொண்டர்களிடம் மறைத்துவிட்டு ஆர்.கே.நகர் வேட்பாளராக நின்று அவருக்காக செலவு செய்ய வைத்ததாக அந்த பேரவையில் உறுப்பினராக உள்ள ஜானகிராமன் என்பவர் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.

மேலும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ரூ.10-க்கு விற்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தான் ஒருவரே திருவள்ளூர் மாவட்டத்திற்காக 5000 உறுப்பினர் சேர்க்கை படிவத்தை 50,000 ரூபாய் கொடுத்து வாங்கியதாகக் குறிப்பிட்டுள்ள ஜானகிராமன், அந்த பேரவையின் பதிவு மனுவில் பொருளாளர் எனக் குறிப்பிட்டுள்ள தீபா, பொதுச்செயலாளர் என கையெழுத்திட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் உறுப்பினர் படிவத்தில் உள்ள முகவரியும் பதிவு செய்ய சமர்ப்பித்த விண்ணப்பத்தில் உள்ள முகவரியும் வேறுபட்டுள்ளதாகவும் ஜானகிராமன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பதாக பலகோடி ரூபாயை தீபாவும் அவருடன் இருப்பவர்களும் மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இல்லாத பேரவைக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிப்பதாகவும் ஏமாற்றியுள்ளார் தீபா.

எனவே அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜா, சரண்யா மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் மாம்பலம் காவல் நிலையத்திலும் சென்னை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்கிற அறிமுகத்தை வைத்துக்கொண்டு பேரவை என்கிற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார் தீபா.

பணம் சம்பாதிப்பதற்கு கல்வி நிறுவனங்கள் நடத்துவது மட்டுமே வழியல்ல என புதிய டிரெண்டை உருவாக்கியிருக்கிறார் தீபா.

Related Topics: Top news