முடிந்த கல்யாணத்துக்கு மேளமடிக்கும் முதல்வர் பழனிச்சாமி..!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, இட ஒதுக்கீடு மூலமான மருத்துவ மாணவர் சேர்க்கையை பாதிக்கும் என்பதால் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

ஆனால், தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், நீட் தேர்வில் விலக்கு பெற்று தற்போதுள்ள மாணவர் சேர்க்கையை பாதுகாக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலை பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசும் தமிழக எம்.பி-க்களும் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், நீட் தேர்வில் விலக்கு பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தரப்படமாட்டாது எனவும் நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் எனவும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அண்மையில் தெரிவித்தார்.

நீட் தேர்வு தொடர்பான குழப்பத்தில் இருந்த மாணவர்களும் ஒரு முடிவாக நீட் தேர்வுக்கு பல்வேறு பயிற்சி மையங்களில் சேர்ந்து தயாராகி வருகின்றனர்.

நீட் தேர்வே நெருங்கிவிட்ட நிலையில், தினகரனின் இடைத்தேர்தல் வெற்றிக்காகவும் கட்சியையும் சின்னத்தையும் பதவியையும் காப்பாற்றுவதற்காகவும் உழைத்துவரும் ”மக்கள் முதல்வர் பழனிச்சாமி”, நீட் தேர்வில் விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு இயற்றிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காலம் தாழ்ந்து எழுதிய இந்த கடிதம், நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற தன்மீதான விமர்சனத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான்  என்பது அப்பட்டமாக தெரிகிறது.

வகுப்பில் தூங்கிக் கொண்டிருக்கும் மாணவர் திடீரென எழுந்து வருகையை பதிவு செய்வது போல மக்களைப் பற்றி கவலை கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்த முதல்வர், தமது கடிதத்தால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்தும் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

முடிந்த கல்யாணத்துக்கு ஏய்யா மேளம் அடிக்கிறீங்க?

எங்க பிரச்னைய நாங்களே பாத்துக்குறோம்.. நீங்க போய் கட்சியை இணைக்குற வேலைய பாருங்க முதல்வரே..! நீங்க எங்களுக்குத் தேவையில்ல.. (மக்களின் மைண்ட்வாய்ஸ்)

Related Topics: Top news