இந்து மதத்திற்கு மாறுவேன் அல்லது தற்கொலை செய்துகொள்வேன்..! முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண் உருக்கம்..!

முஸ்லீம் மதத்தில் திருமணமான ஆண், மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி தனது மனைவியை விவாகரத்து செய்துகொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனால் பல பெண்கள், தங்களது வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.

முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. முத்தலாக் முறையால் விவாகரத்து செய்யப்பட்ட சாயிரா பானு உள்ளிட்ட சில பெண்கள், தங்களக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினர்.

முத்தலாக் வழக்கு விசாரணையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், முத்தலாக் விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனில், இந்து மதத்திற்கு மாறுவேன் அல்லது தற்கொலை செய்து கொள்வேன் என உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷாமீம் ஜகான் என்ற பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார். முத்தலாக் விவகாரத்தில் பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் அந்த பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருமணமாகி 4 ஆண்டுகள் ஆனநிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஷாமீம் ஜகான் என்ற அந்த பெண்ணிற்கு காதர்பூர் காவல் நிலையத்தில் வைத்தே அவரது கணவர் முத்தலாக் கூறியுள்ளார்.

முத்தலாக் விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், இந்து மதத்திற்கு மாறுவேன் அல்லது தற்கொலை செய்துகொள்வேன் என முஸ்லீம் பெண் கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Topics: Top news