முதல்வர் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது! சாலை மறியலால் பாதிப்பு

சேலம் மாநகராட்சி ஒட்டியுள்ள பகுதியான சன்னியாசிகுண்டு ஊராட்சியில், பாறைகாடு, சிவன்காடு, காமராஜர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியுருப்புகள் உள்ளன.

இந்த நிலையில், இந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் வற்றியதாலும், மேட்டூர் குடிநீர் கடந்த ஆறு மாதமாக முறையாக விநியோகம் செய்யப்படாததாலும் ,அப்பகுதி மக்கள் குடிநீர் மட்டுமல்லாமல் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், ஊராட்சி அலுவலகம் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடமும் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து, அந்த பகுதி மக்கள் குடிநீரை விலை கொடுத்து தனியாரிடம் இருந்து லாரிகள் மூலமாக பெற்று வந்தனர்.

இந்த நிலையில், தனியார் லாரிகளில் தண்ணீரை விநியோகம் செய்ய கூடாது என்று வருவாய்துறையினர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொது மக்கள் சுமார் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஐந்நூறுக்கும் மேற்பட்ட பொது மக்கள், காலி குடங்களுடன், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் என்று மறியலில் ஈடுபட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையின் இரு சாலைகளிலும் பொது மக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால், சென்னைக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமல்லாமல் கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெங்களூரு பகுதிக்கு செல்லும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு பொது மக்கள் உடன்படாததால், மறியல் போராட்டம் நீடித்தது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மறியல் போராட்டத்தினால், தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கபட்டது.

இதனை தொடர்ந்து, குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியாரிடம் இருந்து தண்ணிரை பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மறியல் போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Topics: Tamil Online News Live