நிர்வாண நிலையில் அழகி, வீட்டு சுவற்றில் வைத்து பூசிய ஆட்டோ சங்கர் கதை தெரியுமா? தமிழகத்தை உலுக்கிய க்ரைம் ஸ்டோரி!

1988ம் ஆண்டு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் ஆட்டோ சங்கர் கொலை வழக்கும் ஒன்றாகும். இந்த வழக்கு ஐந்தாண்டுகள் நீடித்தது.

திகில் சினிமாவில் வரும் சஸ்பென்ஸ் காட்சிகள் போல அமைந்தது, ஆட்டோ சங்கர் அவனது கூட்டாளிகளுடன் நடத்திய கொலை சம்பவம்.

தன்னுடைய ஆசை காதலி உட்பட 6 பேரை கொடூரமான முறையில் கொலை செய்த ஆட்டோ சங்கருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் தூக்கில் போடப்பட்டான்.

ஆட்டோ சங்கர் யார்?

சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் காந்தி தெருவில் வசித்தவன் சங்கர்(29). ஆட்டோ டிரைவர் என்பதால் ஆட்டோ சங்கர் என பெயர் ஏற்பட்டது.

ஆட்டோ ஓட்டி கொண்டிருந்த சங்கர் ஒரு கட்டத்தில் தனது ஆட்டோவில் கள்ள சாராயம் கடத்திக்கொண்டு வந்து திருவான்மியூர் பகுதியில் விற்பனை செய்ய துவங்கினான். அதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுவதை விட்டு விட்டு சாராய தொழிலில் தீவிரம் காட்ட துவங்கினான்.

திருவான்மியூரில் ஒரு ஓட்டலில் சங்கர் அறை எடுத்து தங்கி கொண்டு கள்ளசாராய வியாபாரத்தை கவனித்து வந்தான். அங்கு அழகிகளை அழைத்து வந்து விபசாரம் நடத்தினான்.

சாராயம், விபசாரம் என தொழில் நடத்தியன் மூலம் சங்கர் பெரும் பணக்காரன் ஆனான். பெரியார் நகரில் இரண்டு பங்களா கட்டினான்.  இந்த ஆடம்பர பங்களாவிற்கு சினிமா புகழ் கோடம்பாக்கம் மற்றும் சேலம், கேரளா ஆகிய இடங்களில் இருந்து அழகிகள் அடிக்கடி வந்து போவார்கள்.

அழகிகளை முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து படைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தான் சங்கர்.  ஆட்டோ சங்கருக்கு ஜெகதீசுவரி என்ற மனைவியும், குழந்தைகளும் இருந்தார்கள்.

பல அழகிகளை மயக்கி மனைவியாக வாழ்ந்து வந்தான். அந்த வகையில், பெங்களூருவில் இருந்து வந்த அழகி லலிதா, 19, என்பவர் அழகில் மயங்கிய சங்கர் அவளை நான்காவது மனைவியாக்கி கொண்டான்.

அவள் ஆட்டோ சங்கருடன் வாழ்க்கை போர் அடித்த நிலையில் அங்கு வந்து சென்ற ஆட்டோ டிரைவர் சுடலை என்பவருடன் ஓடி போய் குடும்பம் நடத்தி வந்தாள். அத்துடன் தொழில் போட்டி சங்கரை நெருக்கடி உண்டு பண்ணியது.

இந்த நிலையில் நண்பர்களின் துதிபாடல்களும் ஆட்டோ சங்கரை சிக்கலில் மாட்டிவிட்டது.  சென்னை மந்தைவெளியை சார்ந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய மூவர் ஆட்டோ சங்கர் வீட்டிற்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அது குறித்து அவர்கள் பெற்றோர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

போலீஸார் ஒரு மாத காலம் நடத்திய தீவிர விசாரணைக்குப்பிறகு துப்பு துலங்கியது. ஆட்டோ சங்கரையும் அவனது கூட்டாளிகளையும் போலீஸார் பிடித்து வைத்து விசாரணை செய்தனர். தனக்கு ஒன்றும் தெரியாது என கூறி ஆட்டோ சங்கர் தப்பித்து கொண்டான்.

மற்றோர் புறம் சங்கர் கூட்டாளிகளான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில் பாபு போலீஸாரிடம் உண்மையை கக்கிவிட்டான். சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி, சுடலை ஆகிய ஐந்து பேரை கொலை செய்ததாக தெரிவித்தான்.

அவர்கள் பிணத்தை வீட்டிற்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான். நான்குபேர் பிணங்களை திருவான்மியூர் பெரியார் நகர் ரங்கநாதபுரத்தில் தெனாலி நகர் ரங்கநாதபுரத்தில் ஒரு வீட்டில் புதைத்தாகவும், சுடலை உடலை எரித்து சாம்பலை மட்டும் காட்டிற்கு எடுத்துச்சென்று கடலில் கரைத்து விட்டதாகவும் தெரிவித்தான்.

அவன் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் அந்த வீடுகளில் பிணங்களை தோண்டி எடுத்தனர். ஒரு வீட்டில் மூன்றாவது அறையில் 5 அடி ஆழமுள்ள குழியில் சம்பத், மோகன் பிணங்கள் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது அறையில் கோவிந்தராஜனின் பிணத்தையும் போலீஸார் தோண்டி எடுத்தனர். அந்த வீட்டிற்கு பக்கத்திலுள்ள கூரை வீட்டின் பின்புறத்தில் ரவியின் பிணம் புதைக்கப்பட்டிருந்தது. 4 பிணங்களும் அழுகிய நிலையில் இருந்தது.

அவர்கள் அணிந்து இருந்த உடைகள் மங்கிப்போகாமல் அப்படியே இருந்தது.
இதை தொடர்ந்து ஆட்டோ சங்கரும் அவனது கூட்டாளிகள் 7 பேரும் 1988ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஆட்டோ சங்கர் மனைவி மற்றும் சில அழகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவனது கூட்டாளிகள் வாக்கு மூலம் அளித்தனர். அதில் ஆட்டோ சங்கர் தனது கொலை படலத்தை எப்படி எல்லாம் நிறைவேற்றினான் என்ற நெஞ்சை பதைபதைக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியது.

பிணங்களை எடுத்து செல்ல பயன்படுத்திய கார், ஆட்டோ, டூவீலர், சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோ சங்கர் வீட்டில் சோதனையின் போது டைரி ஒன்று கிடைத்தது. அதில் அழகிகளுடன் சங்கர் எடுத்துக்கொண்ட ஆபாச படங்கள் கட்டுக்கட்டாக இருந்தது. அழகிகள் சங்கருக்கு முத்தம் கொடுப்பது போன்ற கலர் போட்டோக்களும் சிக்கியது.

இந்நிலையில் ஆட்டோ சங்கர் நான்காவது மனைவியாக சில காலம் இருந்து ஆட்டோ சுடலையுடன் ஒடி போன லலிதாவை காணவில்லை. அவள் போலீஸ்க்கு பயந்து ஓடி இருக்கலாம் என கருதப்பட்டது. லலிதாவும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக  ஆட்டோ சங்கர் தம்பி மோகன் போலீஸில் தெரிவித்தான். அதையடுத்து திருவான்மியூர் பெரியார் நகரில் அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு குடிசை வீட்டில் சென்று போலீஸார் தோண்டினர்.

சமையல் கூடத்தில் இருந்த அடுப்பை அகற்றியதும் சிமெண்ட் தரை தென்பட்டது. அதை தோண்டிய போது நீண்ட வரிசையில் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டடு சிமெண்ட் பூசப்பட்டு இருந்தது. அந்த செங்கற்களை போலீஸார் அகற்றினார்கள். அதற்கு கீழே மேலும் தரையைத் தோண்டிய போது உள்ளே எலும்புக்கூடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எலும்புக்கூட்டின் மீது எந்த வித துணியும்இல்லை நிர்வாணமாக
இருந்தது. எலும்புக்கூட்டை போலீஸார் வெளியே எடுத்தனர்.  அழகி லலிதாவை கொலை செய்து ஆட்டோ சங்கர் நிர்வாணமாக
புதைத்து உள்ளான் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ சங்கர் செய்த கொலை பட்டியல் 6ஆக உயர்ந்து.

கொலை செய்யப்பட்டவர்கள் விவரம்:

1. பெங்களூர் அழகி லலிதா (வயது 22).

2. சுடலை (வயது 28). ஆட்டோ டிரைவர், தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்தவன்.

3. திருவான்மியூர் ரவி. ஆட்டோ டிரைவர் (வயது 27).

4. சம்பத் மந்தைவெளியை சேர்ந்த டெய்லர் (வயது 30).

5. மோகன், பொதுப்பணித்துறை ஊழியர் (வயது 29)

6. கோவிந்தராஜ் (வயது 28).

கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், மோகன் (சங்கர் தம்பி), எல்டின் என்கிற ஆல்பர்ட் (மைத்துனர்) கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகிய 10 பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆவார்.

தமிழக வரலாற்றில் அதிக பரபரப்புடன் பேசப்பட்ட ஆட்டோ சங்கர் கொலை வழக்கு, ஐந்து ஆண்டுகள் பரபரப்பாக நடந்தது. தினம் தினம் தினசரி நாளிதழில் இதுவே பரபரப்பான செய்தியாக இருந்தது. அந்த செய்தி தற்போதைய தலைமுறைகளும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.

அதே வேளையில் தவறு செய்பவன் எப்படியும் ஒரு தடயத்தை விட்டு செல்வான் என்பார்கள். அது போல் தப்பு செய்கிறவன் ஒரு நாள் மாட்டி கொள்வான் என்பது இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

Related Topics: Tamil Online News Live