விவசாயிகளுக்கு ஆதரவாக திண்ணை பிரச்சாரம்..! சேலத்தில் புதுமையான முடிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம் தொடர்பாக,

சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கட்சி கூட்டம் சேலம் மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்தை சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் முழு அளவில் நடத்திட தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வேலை நிறுத்த போராட்டம் முழு அளவில் வெற்றி பெற அனைத்து தரப்பு மக்களிடமும் நேரில் சென்று விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், சேலம் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Topics: Tamil Online News Live