அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணிபுறக்கணிப்பால் நோயாளிகள் அவதி!

மருத்துவ பட்ட மேற்படிப்பில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீகித ஒதுக்கீடு இருந்து வந்த நிலையில், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திட தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் முன்தினம் ஒரு மணி நேர பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி சேலம் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் அரசு டாக்டர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஒரு மணி நேரம் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு பணிகளை புறக்கணித்து, மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அரசு டாக்டர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு விரைவில், மேல் முறையீடு செய்திட வேண்டும் என்றும், மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்ததால், புற நோயாளிகளுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது.

Related Topics: Tamil Online News Live