2009 மே18 இலங்கை முள்ளி வாய்க்காலில் நடந்தது என்ன? விவரிக்கிறது லைவ்டே க்ரைம் ரிப்போர்ட்!

பாலசிங்கம் நடேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர். இவர் முல்லைத்தீவில் முள்ளி வாய்க்கால் என்ற இடத்தில் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி, புலிகளின் அமைதிச் செயலகப் பொறுப்பாளர் சீ. புலித்தேவன் ஆகியோரும் 2009ம் ஆண்டு இதே நாளில் (மே 18) சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நடேசன் முன்னாள் இலங்கை காவல்துறையில் பணிபுரிந்தவர். தலைநகர் கொழும்பில் உள்ள நாரகேன்பிட்டி காவல் நிலையத்தில் பணி செய்த காலத்தில் அங்கு பணி செய்த விசித்திரா என்ற சிங்களப் பெண்ணைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். விசித்திரா, ஸ்ரீலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர்.

1983-ம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப்படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர். அந்தக்காலப் பகுதியில் விடுதலைப்புலிகளுடன் இணைந்துகொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார்.

1990-ல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன், 1991-ல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தொடங்கியபோது அதன் இயக்க-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2007, நவம்பர் 2-ம் நாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனின் இறப்பை அடுத்து நடேசன் அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாக்குமாறு நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மே 18 (2009) அதிகாலை 5:45 மணி வரை வரை உலக சமூகம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளிடமும் கோரிக்கை விடுத்திருந்ததாக புலிகளின் பேச்சாளர் செல்லப்பா பத்மநாதன் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுச் செயலரின் உயரதிகாரி விஜய் நம்பியார், மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உறுதியளித்ததன் பேரில் நடேசன், புலித்தேவன், மற்றும் நடேசனின் மனைவி உட்பட பொதுமக்கள் சிலர் வெள்ளைக் கொடியைத் தாங்கி சரணடைய வெளியே வந்தபோது அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் நடேசன், புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

Related Topics: Tamil Online News Live