“ஜெயலலிதா-சசிகலா ” உரையாடல் வீடியோவை விரைவில் வெளியிடுவேன் – திவாகரனின் மகன் மிரட்டல்!

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தப்போது “ஜெயலலிதா-சசிகலா ” இடையே நடந்த உரையாடல் வீடியோவை விரைவில் வெளியிடுவேன்’ என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிச -5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் மறைந்து 2 மாதத்தில் அ.தி.மு.க இரு அணிகளாக உடைந்தது.

இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் ஓ.பி.எஸ் அணியினர் இந்த கருத்தையே முன்வைத்தனர்.

இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை எழுதியிருக்கிறார். அதில், கொலை பழி சுமத்தியும் அம்மாவின் சிகிச்சை படத்தை வெளியிடாததற்கு காரணம், பச்சை கவுன் உடையில், எதிரிகள் அவரை பார்க்கக்கூடாது என்பதற்காக தான். இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல். சிங்கத்தை சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்கு நாங்கள் ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம். ஆனால், ஓ.பி.எஸ்., கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மாவை பிணப்பெட்டியில் வைத்து வாக்கு சேகரித்தார்.

உண்மை வலிமையானது, ஒரு நாள் புரட்சித்தலைவி அம்மாவும், தியாக தலைவி சின்னம்மா(சசிகலா) இருவரும் மருத்துவமனையில் நடத்திய உரையாடல் வீடியோ வெளிவந்தால்…? பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், ஓ.பி.எஸ் இவர்களை என்ன செய்யலாம்…? அந்த நாள் மிக விரைவில் என்று அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோவை ஜெயானந்த் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Topics – Tamilnadu