ஜெ., மரணம் குறித்து மோடியிடம் விசாரியுங்கள் – அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது, அதனால் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்போது, ஜெ., மரணம் குறித்து பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தடாலடியாக அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ஓபிஎஸ் அணியினருக்கு என்ன வேண்டும் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு தேவை ஜெயலலிதா ஆட்சி. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கட்சியும் ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பி கட்சியில் இருந்து விலகிவிட்டார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும். ஓபிஎஸ் விசாரிக்கப்பட வேண்டும், அதேபோல், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.

எய்ம்ஸ் மத்திய அரசின் மருத்துவமனை, அதனால், மத்திய அரசையும் விசாரணைக்கு கூப்பிடுவீர்களா? மோடியை விசாரணைக்கு கூப்பிடுங்கள். ஜெ.,மரணம் குறித்து ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். மர்மம் மர்மம் என்று எத்தனை நாட்களுக்கு சொல்லி கொண்டு இருப்பீர்கள்? 60 நாட்கள் முதல்வராக இருக்கும் போது ஓ.பி.எஸ்ஸுக்கு மர்மம் தெரியவில்லையா? இப்போது தான் மர்மம் தெரிகிறதா? இது நியாயம் இல்லை என்று தங்க தமிழ்ச் செல்வன் ஆவேசமாக கூறினார்.

Related Topics – Tamilnadu