சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மீண்டும் இணைகிறது “தல”, “தளபதி” கூட்டணி!

அடுத்த வருடம் களமிறங்க காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராக மீண்டும் இளையதளபதி விஜயை நியமிக்க  அந்த அணி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் டி.20 போட்டியில் பங்கேற்ற  8 தொடர்களிலும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரு அணி என்ற பெருமையை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை காலம் இந்த ஆண்டோடு நிறைவடைவதால், அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் மீண்டும் களமிறங்குகிறது, இதனை சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசனும் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான விளம்பர தூதுவர்களை நியமிக்கும் முயற்சியில் அந்த அணி நிர்வாகம் தற்போது துவங்கிவிட்டதாக தெரிகிறது. இதற்காக கடந்த 2008ம் ஆண்டு சென்னை அணியின் விளம்பர தூதர்களாக இருந்த இளையதளபதி விஜய் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையே மீண்டும் சென்னை அணியின் விளம்பர தூதராக நியமிக்க அந்த அணி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Topics – Cricket News