சித்திரை பெருவிழாவிற்கு தயாராகும் கூத்தாண்டவர் கோயில்.!

விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு சித்திரை பெருவிழா வரும் 25ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்குகிறது.

அன்று மாலை கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு கிராம மக்கள் சார்பில் கூழ் குடங்களை கோயில் முன்பு படையல் வைத்து வழிபட்ட பின்னர் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்குவர்.

26ம் தேதி பந்தலடியில் உள்ள தெய்வநாயகம் தோப்பில் கிராம மக்கள் சார்பில் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 7ம் தேதி காலையில் கூத்தாண்டவருக்கு பாலாலயம் நிகழ்ச்சியும், 8ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவாக சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி மே 9ம் தேதி நடைபெறுகிறது. அன்று தான் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள்.

தாலி கட்டியபின்பு புதுமணப் பெண்கள் போல் காட்சி அளிக்கும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயில் அருகில் விடிய, விடிய கூத்தாண்டவரை தங்கள் கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள்.

மே 10ம் தேதி காலை சித்திரை தேரோட்டமும், 11ம் தேதி விடையாத்தியும் நடைபெறுகிறது. 12ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரைப் பெருவிழா நிறைவு பெறுகிறது.

Related Topics:Aaanmeega News