சசி சென்னை நீதி மன்றத்துக்கு அழைத்து வரப்படுகிறார்! அது எப்ப?

சசிகலா அந்நிய செலவாணி மோசடி செய்ததாக கடந்த 1996ம் வருடம், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு சென்னை எழும்பூர் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், சிறையில் இருக்கும் சசிகலா அந்நிய செலவாணி வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், வீடியோகான்பிரன்சிங் மூலம் ஆஜராவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று  நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சசிகலா தரப்பில் ஆஜரான அவரது வக்கீல், சசிகலா முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அவர் பெங்களுரு சிறையில் இருந்து இவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளார்.

ஆகவே நீதி மன்றம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, பெங்களுரு சிறையில் வீடியோகான்பிரன்சிங் மூலம் ஆஜராவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.

பின்னர் அரசு தரப்பு, மற்றும் சசிகலா தரப்பின் வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி, மே 4ம் தேதி சசி நேரில் ஆஜராக வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலாவின் தம்பி திவாகரன், மே 4ம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்றும் கூறினார்.

சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றினார். தானே முதல்வராக வேண்டும் என்று காய்களை நகர்த்தினார். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து, அவரை சிறையில் தள்ளியது.

சிறைக்கு செல்லும் சற்று நேரத்துக்கு முன்னர், தனது அக்கா மகனை துணைப் பொதுச் செயலாளராக்கி, பொதுச் செயலாளருக்கான அனைத்து அதிகாரத்தையும் வழங்கினார்.

பின்னர் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல், தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒபிஎஸ் அணியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட உள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் தனக்கு தலைக்குனிவாகவும், அவமானமாகவும் சசிகலா கருதுகிறாராம். அதனால்தான் சசிகலா சென்னை வருவதை விரும்பவில்லையாம்.

இதனால்தான் சசி சென்னை எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.