டெல்லிக்கு காவடித்தூக்கும் ஒபிஎஸ்-இபிஎஸ்.! பதவிப்படுத்தும் பாடு..! ஆட்சி கவிழ்கிறது..?

அதிமுக-வில் தினம், தினம்  அதிரடி திருப்பங்கள் ஏற்படுகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி வீட்டில் நடந்த அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்  இரு அணிகளும் இணைவது, அதன்மூலம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது என்றும் பரபரப்பாக பேட்டி அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

இரட்டை இலையை மீட்பதற்காகவே தினகரனையும், அவரது உறவினர்களையும் ஓரங்கட்டிவிட்டோம் என்கின்றனர். பன்னீர் செல்வம் அணியினரோ தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்று சொல்கிறார்கள்.

ஆனால் இவர்களின் அணிகளுக்கு தேவைகள், பதவி நோக்கங்கள் நிறைவேறினால்தான் இரு அணிகளுமே ஒன்றிணைய முடியும்.

அது அவ்வளவு எளிதில் நடந்துவிடுமா – நடக்கத்தான் விட்டுவிடுவார்களா டெல்லி வாலாக்கள் என்பதுதான் இன்றைய அரசியல்.

ஆம். அவர்களின் திட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான கொங்கு லாபியை கொண்டு, எடப்பாடியை முதல்வர் பதவியில் தொடரச் செய்ய வேண்டும். அதன்மூலம் ஓ.பன்னீருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குமான பதவிச் சண்டையை உருவாக்க வேண்டும்.

இணைவதுபோல வந்த இரு அணிகளும் பதவிச்சண்டை காரணமாகத்தான் இணையவில்லை என்கிற அவப்பெயரை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். என்பதே டெல்லிவாலாக்களின் இப்போதைய சூட்சமமாக உள்ளது.

லலிதா குமாரமங்கலம், சி.பி.ராதாகிருஷ்ணன், கேரள கவர்னர் சதாசிவம் போன்ற பா.ஜ.கவினர்  எடப்பாடி தமிழக முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்று போர்க் கொடியை தூக்கியுள்ளனர்.

எடப்பாடி முதல்வர் பதவியிலிருந்து விலகினால், தினகரனின் அரசியல் வளர்ச்சி, அனுதாபம் அதிகரிக்கும்.

பிஜேபி-யின் கண் அசைவில்தான் அதிமுகவில் அனைத்து நிகழ்வுகளும் நடக்கின்றன என்பது மக்கள் மத்தியில் பேசுவது உண்மையாகிவிடும். அதன்மூலம் தினகரன் மற்றும் சசி   குடும்பத்தினர் அதிமுகவில் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் பெறுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.

பன்னீர்செல்வத்தை எதிர்த்துதான் 122 எம்.எல்.ஏ.க்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

எனவே, பன்னீர் செல்வம் முதல்வர் பதவியைக் கேட்பதில் எந்த உரிமையும் இல்லை’ என்று கூறுகிறார்கள். பன்னீரோ, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சிக்கலின் போது எல்லாம் நான்தான் முதல்வராக பதவி வகித்து வந்தேன்.

தொண்டர்கள் எங்களைதான் உண்மையான அதிமுக என்று நம்பியுள்ளனர். முதல்வர் பதவி இல்லை என்றால் நாங்கள் சசி அணியை விட்டு வெளியே வந்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்கிறனர்.

இதனிடையில் நமக்கு கிடைக்காத கட்சியும், ஆட்சியும் யாருக்கும் கிடைத்துவிடக்கூடாது என்று, சசி மற்றும் அவரது உறவினர்கள் முழு மூச்சாக வேலை செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவான சில எம்எல்ஏக்களை இரு அணிகளில் இருந்தும் பிரித்து, ஆட்சியை நடத்தவிடாமல் செய்து, ஆட்சி கலைப்புக்கு, ஒபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரின் பதவி சண்டைதான் காரணம் என்று அதிமுகவினர் மத்தியில் கூறுவதற்கு திட்டம் தீட்டி வருவதாகவும் அதிமுக மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜெயலலிதா இருந்தபோது எதுவும் செய்யமுடியாமல் தவித்த பா.ஜ.க தற்போது, அதிமுகவை சின்னாபின்னமாக உடைத்து கூறுபோட துடிக்கிறது. இவ்வாறு டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Topics : Enna kodumai sir idu