5 வருடமாக விசாரிக்குது சிபிசிஐடி போலீஸ்! துளியும் முன்னேற்றம் இல்லை! திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு!

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி தொழில் அதிபர் கே.என்.ராமஜெயம். கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் எங்கு நடந்தது. யாரால் நடத்தப்பட்டது என்கிற விவரம் இதுவரை தெரியாத நிலை உள்ளது.

ராமஜெயம், கே.என்.நேருவின் மூளை என்றே கூறலாம். சாதாரண, பஞ்சாயத்து யூனியன் தலைவராக வந்து, லால்குடி தொகுதியில் எம்எல்ஏவாக பதவி  வகித்து, பெரும்பான்மை சமுதாய மக்கள் மத்தியில் திமுகவின் மாவட்ட செயலாளராகி, இன்று திமுகவில் அசைக்க முடியாத ஒரு புள்ளியாக இருப்பவர் கே.என்.நேரு.

அதற்கு முதன்முதல் காரணமாக, முதுகெலும்பாக செயல்பட்டவர் ராமஜெயம். இவர்கள் கடந்த 1989ம் ஆண்டு முதல், இன்று வரை மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வருகின்றவர்கள்.

2011ம் ஆண்டு திமுக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தது. அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டு முதல்வராக வந்தார்.

2012ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை சம்பவம் நடந்தது. சம்பவத்தன்று அதிகாலை வாக்கிங் போனதாக கூறப்பட்ட ராமஜெயம் வீட்டுக்கு திரும்பவில்லை.

10 மணி ஆகியும், வீட்டுக்கு வராததால், அவரின் மனைவி, தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து ராமஜெயம் சாயலில் ஒருவர் கல்லணை சாலையில், காவிரி கரையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

போலீசாரும் விரைந்துசென்று பார்த்த போது இறந்து கிடந்தவர் ராமஜெயம்தான் என்பதும் தெரிய வந்தது.

அவரின் கைகள் மற்றும் கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்டு, வாயில் மிகப்பெரிய துணி அடைக்கப்பட்டு துடி, துடிக்க கொலை செய்யப்பட்டு இருந்தார்.

கே.என்.நேருவுக்கு உலக அளவில் சொத்துக்களை சேர்த்தவர் ராமஜெயம், அவர் தில்லைநகரில் உள்ள அனைவரின் வீடுகளையும் மிரட்டி வாங்கி அட்டூழியம் செய்தவர் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இவர்களுக்கு சொந்தமாக தனித் தீவு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இவருக்கு எதிரிகள், திருச்சியில் இருக்க வாய்ப்பு இல்லை.

அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு கிடையாது என்று பேசப்பட்டு வந்த நிலையில், மர்மமாக கொல்லப்பட்டார்.

பெண் தொடர்புகள் காரணமா? அரசியல் காரணமா? சொத்து பிரச்னை காரணமா? ராமஜெயத்தின் அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் நம்மைவிட எங்கு வளர்ந்து விடுவானோ என்கிற எண்ணத்தில் நடந்த கொலையா? என பல கோணங்களில் வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், போலீசார் இதுவரை கொலையாளிகளை கண்டுபிடிக்கவில்லை.  இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை பற்றி 12 வது நிலை அறிக்கையை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்தது சிபிசிஐடி.

ராமஜெயம் கொலை தொடர்பாக 300-க்கு மேற்பட்ட முன்விரோத காரணங்கள் பற்றி சந்தேகம் உள்ளதாகவும், 300 சந்தேகக் கோணங்களையும் ஒவ்வொன்றாக விசாரித்து வருவதாகவும் ஐகோர்ட்டில் சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.

5 ஆண்டாக விசாரணை நடத்தியும் கொலையாளிகளை சிபிசிஐடி நெருங்கவில்லை என ராமஜெயம் மனைவி புகார் அளித்துள்ளார்.

மேலும் சிபிசிஐடி விசாரணை மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும் ராமஜெயம் மனைவி லதா கருத்து தெரிவித்துள்ளார்.

 எதையும் செய்து முடிக்கக்கூடிய திறமை, பணபலம், ஆள்பலம் எது இருந்தாலும் நம்மை மிஞ்சவும் நாட்டில் ஆட்கள் உண்டு என்று அரசியல் வாதிகளுக்கு உணர்த்தும் வகையில் ராமஜெயம் கொலை அமைந்து விட்டதாக திருச்சி மக்கள் பேசி வருகின்றனர்.

Related Topics : Don’t miss