‘‘ரஜினியால் மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியாது’’ முன்னாள் நீதிபதி கட்ஜூ காட்டம்!

சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை 4வது நாளாக சந்தித்து வருகிறார். அவர் கூடிய விரைவில் தனிக் கட்சி தொடங்கவுள்ள நிலையில், மக்களின் முக்கியமான பிரச்னைகளுக்கு ரஜினிகாந்திடம் தீர்வு கிடையாது. அவரை ஏன் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்கண்டேய கட்ஜூ தெரிவிக்கையில், கடந்த 1967-68ம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, தமிழ் நண்பர்களுடன் சிவாஜிகணேசன் நடித்த திரைப்படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது, படம் ஆரம்பித்தவுடன் சிவாஜியின் காலைத்தான் காட்டினார்கள். உடனே தியேட்டரில் ஆரவாரம் கைதட்டல் என ஆரம்பித்துவிட்டார்கள்.

அதேபோலத்தான் தற்போது ரஜினி மீது ரசிகர்கள் பைத்தியமாக இருக்கிறார்கள். அரசியலுக்கு வரவேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால், மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு ரஜினியிடம் தீர்வே கிடையாது. தீர்வு இல்லாதபோது ரஜினியை ஏன் அரசியலுக்க அழைக்கிறீர்கள்? வறுமை, வேலையின்மை, விவசாய பிரச்னைகளுக்கு ரஜினியிடம் தீர்வு உள்ளதா? திரைத்துறையினரை தென்னிந்தியவர்கள் வழிபடுவதை புரிந்துகொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Topics: Chennai News