கிளம்பிட்டாங்கய்யா..! அடுத்தக்கட்ட அதிரடிக்கு தயாராகும் விவசாயிகள்!!

தமிழக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தது. தினம் தினம் நூதனப் போராட்டம் நடத்திய நிலையில், பா.ஜ.கவைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தன. இருப்பினும் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு உறுதி ஏதும் அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்தால் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து டெல்லியில் போராடிய விவசாயிகளை முதல்வர் நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால், மே 21க்குள் மத்திய அரசு உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டத்தை கையில் எடுப்போம். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி ஒன்றிணைந்து போராடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

தற்போது மத்திய அரசு எந்தவித உத்தரவாதமும் கொடுப்பதாக தெரியவில்லை. இதனால் வரும் 21ம் தேதி தங்களது போராட்டத்தை மீண்டும் தொடங்கவுள்ளனர். இதற்காக போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க அய்யாக்கண்ணு திருச்சியிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தமிழக விவசாயிகள் 15 பேரும் உடன் சென்றுள்ளனர்.

இவர்கள் டெல்லி சென்று போராட்டக்குழுவினருடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுசெய்யவுள்ளதாக தெரிகிறது.

Related Topics: Online Tamil News