கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

காங்கிரஸ் ஆட்சியின்போது நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சிதம்பரத்தின் மகன்  கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதனைத்தொடர்ந்து, வாசன் ஹெல்த் கேருக்கு கார்த்தி சிதம்பரம் ரூ.2,262 கோடி முதலீடு செய்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த நிறுவன சென்னை தலைமையகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஐஎன்எஸ்., மீடியா என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த ரூ.305 கோடி முதலீட்டை ரூ.4.62 கோடியாக குறைத்துக் காட்ட, கடந்த 2007ல், உதவி செய்ததாகவும், அதற்காக ஆதாயம் பெற்றதாகவும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீது  சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன், சென்னையில் உள்ள அவரது வீடு உட்பட, நாடு முழுவதும் 16 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையில், 2015 டிசம்பரில், கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை தொடர்பாக, மத்திய அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

இது தொடர்பாக, அவர் மீது மேலும், நான்கு வழக்குகள் பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது . இந்நிலையில், லண்டன் சென்றுள்ள கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Topics: Online Tamil news