2 மடங்கு டேட்டா சலுகை; ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!

தொலைதொடர்புத்துறையில் ‘ஜியோ’ இலவச டேட்டா சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களின் சேவைகளை புறக்கணித்து வந்தனர். இதனைடுத்து, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை அறிவிக்கத் தொடங்கியது.

மேலும், பிராட்பேண்ட் டேட்டா சேவைகளிலும் அதிவேக பிராட்பேண்ட் திட்டங்களையும் அறிவித்தன. குறிப்பாக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், அதிவேக பிராட்பேண்ட் சேவையிலும் சலுகைகளை அறிவித்தது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு பழைய கட்டணத்திலேயே 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த சலுகை அதிவேக பிராட்பேண்ட் சேவைகளுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

புதிய சலுகை திட்டங்களின்படி மாதாந்திர பிராட்பேண்ட் திட்டங்களில் வாடிக்கையாளர்கள் 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா பெற முடியும் என பாரதி ஏர்டெல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.899க்கு வழங்கப்பட்ட 30 ஜிபி டேட்டாவுக்கு பதில் 60 ஜிபி அதிவேக டேட்டாவாகவும், ரூ.1,099க்கு வழங்கப்பட்ட 50 ஜிபி டேட்டாவுக்கு பதில் 90 ஜிபி டேட்டாவாகவும் வழங்கப்படுகின்றது.

ரூ.1,299 திட்டத்தில் புதிய சலுகையின் கீழ் 75 ஜிபி டேட்டாவுக்கு பதில் 125 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது, ரூ.1,499 திட்டத்தில் 100 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய சலுகையின் கீழ் 160 ஜிபி வழங்கப்படுகின்றது.

இதேபோன்ற கூடுதல் டேட்டா சலுகைகள் அனைத்து நகரங்களிலும் ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவையும் வழங்கப்படுகிறது என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

Related Topics: Chennai News